இந்தியா

அடுத்த பிரதமராக தமிழருக்கு வாய்ப்பு: ப.சிதம்பரத்துக்கு மம்தா ஆதரவு?

Published

on

நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவில் யார் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னர் இந்த தேர்தல் முடிவுகள் எவ்வாரு இருக்கும் என்ற கருத்துக்கணிப்புகளும், அரசியல் ஆரூடங்களும் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளது, இந்த தேர்தலில் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது, மாநில கட்சிகளின் ஆதரவில் தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதாகும். இந்த சூழலில் மாநில கட்சிகளின் தயவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் பிரதமராக யார் வருவார் என்பது பலரது கேள்வியாக உள்ளது. ராகுல் காந்தியை பிரதமராக திமுகவின் ஸ்டாலின் முன்மொழிந்தாலும் மம்தா பானர்ஜி போன்ற முக்கிய மாநில கட்சி தலைவர்களுக்கு ராகுல் பிரதமராக வருவதில் விருப்பம் இல்லை.

இந்த சூழலில் டெல்லியில் நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த பிரதமர் யார் என்ற ஆலோசனையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதில் ராகுல் காந்தி பிரதமராக வருவதில் தனக்கு விருப்பம் இல்லாததை மம்தா பானர்ஜி சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்ததாகவும், காங்கிரஸின் மூத்த தலைவராக இருக்கும் ப.சிதம்பரத்தைப் பிரதமராக்கலாம் என்ற ஆலோசனையும் அவர் கூறியதாக தகவல்கள் வருகின்றன.

சிதம்பரத்தை பிரதமராக கொண்டுவந்தால் மாநில கட்சிகளின் ஆதரவை எளிதாக பெறலாம் என்ற ஐடியாவையும் மம்தா அளித்துள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த கருத்து டெல்லி வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியும் தேர்தல் முடிவுகளுக்கு பின் ப.சிதம்பரத்தை முன்னிருத்தினால் ஒரு தமிழர் பிரதமராகும் வாய்ப்பு வரக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending

Exit mobile version