தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் 10 அடி உயரத்தில் எழும் அலை? சுனாமி போல் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!

Published

on

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் இன்று இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மகாபலிபுரம் கடற்கரையில் கடல் அலையை சுமார் 10 அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்பி உள்ளதாக வந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுனாமி போல் ஆக்ரோஷமான அலைகள் காரணமாக மகாபலிபுரம் கடற்கரைகு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் இன்று இரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்பதால், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும் மாமல்லபுரம் பகுதியில் புயலால் ஏற்படும் சேதத்தை உடனடியாக சரிசெய்ய மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் தான் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடை பயிற்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை சாலையில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் இன்று சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்களிலும் நடை பயிற்சிக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழை பெய்து வருவதால் புழல் ஏரியில் நீர் வரத்து 140 அடியாக அதிகரித்துள்ளதாகவும் குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதேபோல் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 10ல் இருந்து 36 கன அடியாக அதிகரித்துள்ளதாகவும், கிருஷ்ணா நதி நீர்வரத்து 571 கன அடியாக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றம், பொன்னேரியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும், ஆவடியில் 3 செ.மீ, பூவிருந்தவல்லி, சோழவரம், தாமரைப்பாக்கம் பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version