தமிழ்நாடு

ஆசைப்பட்டேன் கிடைக்கவில்லை: எடப்பாடி மீதான அதிருப்தியில் ஜெயலலிதா சமாதியில் மைத்ரேயன்!

Published

on

அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து தனது மனக்குறைகளை கூறியுள்ளார்.

மைத்ரேயேன் தொடர்ந்து மூன்று முறை ஜெயலலிதாவால் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற மைத்ரேயனுக்கு அவர் பல்வேறு பொறுப்புகளை வழங்கி சிறப்பித்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் மைத்ரேயனை கவனிக்க யாருமே இல்லை.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் சசிகலா தரப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தர்ம யுத்தம் நடத்தியபோது, அவருக்கு ஆதரவாக முதல் ஆளாய் சென்றவர் மைத்ரேயன் தான். ஆனால் ஓபிஎஸ் தரப்பும், ஈபிஎஸ் தரப்பும் இணைந்த பின்னர் மைத்ரேயனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனை சில இடங்களில் மைத்ரேயன் வெளிப்படுத்தவும் செய்தார்.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக மைத்ரேயன் பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்த நிலையில் இன்று ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, தென்சென்னையில் போட்டியிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதில் எனக்கு வருத்தம் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version