இந்தியா

“அதிகார கோழைகளே!”- மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தை அதிரவைத்த திரிணாமூல் எம்.பி-யின் பேச்சு

Published

on

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் செய்து வருகின்றனர். டெல்லி எல்லைகளில் நடந்து வரும் இந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய மத்திய அரசு தரப்பும் தன்னால் முடிந்த காரியங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் போராட்டக் களத்தில் இணைய சேவையைத் துண்டித்தது அரசு. தொடர்ந்து மின்சாரத்தைத் துண்டித்தது. அதையடுத்து, அடிப்படைத் தேவைகளான தண்ணீர் உள்ளிட்ட விஷயங்களையும் அரசுத் தரப்பு முடக்கியதாக புகார் எழுந்தது.

இதற்கு இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகளவிலும் எதிர்ப்பு எழுந்தது. போராட்டத்தில் அதிக மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, விவசாயிகளைத் தனிமைப்படுத்தி இறும்புக் கம்பிகளைக் கொண்டு சுவர் எழுப்பியது மத்திய அரசு. இப்படி அரசின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் ஆவேச உரையாற்றியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக அவர் ஆற்றிய இந்த உரை கவனம் பெற்று வருகிறது.

தனது உரையின் போது மோய்த்ரா, ‘விவசாயிகள் போராட்டம் 60 நாட்களாக அமைதியான முறையில் நடந்து வந்தது. அப்படி அற வழியில் நடந்து வந்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் தாங்கள் ஒரு தைரியசாலி என்று அரசு நினைக்கலாம். ஆனால், உண்மையில் அப்படி இல்லை.

கோழைத்தனத்துக்கும் தைரியத்துக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. கோழைகள், தங்கள் கைகளில் அதிகாரம் இருக்கும் போதுதான் தைரியமாக நடந்து கொள்வார்கள். ஆனால் தைரியசாலிகள், தங்களிடம் எதுவும் இல்லை என்றாலும் தைரியத்துடன் தான் செயல்படுவார்கள். நீங்கள் தைரியசாலிகள் அல்ல. அதிகார கோழைகள் என்பதை மறந்து விடாதீர்கள். விவசாயிகளுக்கு எதிராக காவல் துறையையும், அரசு அதிகாரிகளையும் ஏவிவிடும் போது அதை நினைவில் கொள்ளுங்கள்.

விவசாயிகள் போராட்டத்தைக் காட்டும் ஊடகங்களை எதேச்சதிகார சட்டங்களை வைத்து ஒடுக்குகிறீர்கள். பாஜக அரசு, ஒன்றைத் தொடர்ச்சியாக சொல்லி வருகிறது. அதாவது, காங்கிரஸ் காலத்தில் தான் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று. ஆனால், இப்போது அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அதை மறந்து விடாதீர்கள்’ என்று ஆவேசமாக மத்திய அரசை விமர்சித்தார்.

seithichurul

Trending

Exit mobile version