தமிழ்நாடு

நடுரோட்டில் நிறுத்தப்பட்ட துணை கண்காணிப்பாளரின் வாகனத்திற்கு அபராதம்!

Published

on

மதுரையில் நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த துணை கண்காணிப்பாளரின் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் கீழ ஆவணி மூல வீதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாக அரசு வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனால் வாகனத்திற்கு பின்னே அடுத்தடுத்து வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாமல் தவித்தனர். நீண்ட நேரம் ஹாரன் அடித்தும் யாரும் அரசு வாகனத்தை எடுக்காததால், அதை அப்படியே போட்டோ எடுத்து காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அது தேனி மாவட்ட தீண்டாமை தடுப்புப் பிரிவின் துணை கண்காணிப்பாளருடைய வாகனம் என்பதை உணர்ந்தனர். பின்பு, அரசு உயர்அதிகாரி என்றாலும், இப்படி பொறுப்பில்லாமல் இருக்கலாமா என்று அந்த வாகனத்திற்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வாகனம் பழுது சரிபார்ப்புக்காக கலெக்டர் வாகனங்கள் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும், பழுது நீக்கிய பின்பு, அதனை ஓட்டி வந்த காவலர் நடுரோட்டில் நிறுத்தி விட்டு சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

இப்படி நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய காவலர் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. இருப்பினும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதற்கு இணங்க துணை கண்காணிப்பாளரின் வாகனத்திற்கே அபராதம் விதித்த போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.

Trending

Exit mobile version