ஆன்மீகம்

மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு இன்று சாப விமோசனம் அளிக்கிறார் கள்ளழகர்!

Published

on

மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த மே மாதம் 2 தேதி காலையில் வெகுவிமரிசையாக நடந்தது.

மதுரை அழகர் கோவில்

மதுரை அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த மே மாதம் 1 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது உலகப் புகழ்பெற்ற சிறப்பு நிகழ்ச்சியாகும். மே 4 ஆம் தேதி மூன்று மாவடியில், மதுரை மக்கள் கள்ளழகரை எதிர் கொண்டு வரவேற்கும் எதிர் சேவை சிறப்பாக நடைபெற்றது.

நேற்று காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார். பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு கள்ளழகரை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல இலட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்தனர்.

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மே 6 ஆம் தேதி (இன்று) காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் காட்சி தருகிறார். இதனைத் தொடர்ந்து இன்று மாலையில், கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று இரவு விடிய விடிய தசாவதார காட்சி சிறப்பாக நடைபெறும். மே 7 ஆம் தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தர இருக்கிறார். அன்றைய இரவுப் பொழுதில் பூப்பல்லக்கு விழா நடக்க இருக்கிறது.

Trending

Exit mobile version