தமிழ்நாடு

நித்தியானந்தாவின் பரபரப்பு அறிக்கைக்கு இடையே புதிய மதுரை ஆதினம் நியமனம்!

Published

on

மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் சுவாமி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதை பார்த்தோம்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மதுரை ஆதினம் மறைவு குறித்து கூறியதாவது: ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் பதவியேற்கவுள்ளதாக மதுரை ஆதீனத்தில் உள்ள மடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு இளவரசராக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மபுரி ஆதீனம், திருவாவடுதுறை ஆதினம், கோவை காமாட்சிபுரி ஆதினம் உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற ஆதீனங்கள் சார்பில் இவருக்கு மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக மேல் முடி சூட்டப்படும் என்றும் முடி சூட்டப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதினம் தான் என நித்தியானந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் நித்தியானந்தாவின் அறிக்கையை பொருட்படுத்தாமல் மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதீனமாக ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version