இந்தியா

பதவியேற்ற 4 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி: சொன்னதை செய்த ராகுல் காந்தி!

Published

on

மத்திய பிரதேச மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நேற்று மதியம் பதவியேற்றார். அவர் பதவியேற்ற நான்கு மணி நேரத்தில் தனது முதல் கையெழுத்தாக விவசாய கடன் தள்ளுபடிக்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. அதில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. குறிப்பாக பாஜக கோட்டையான மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்காமல் ராகுல் காந்தியை முன்னிறுத்தி வாக்கு சேகரித்து தேர்தலை சந்தித்தது.

அப்போது தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை ராகுல் காந்தி அளித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியை பிடித்துள்ளதால் அந்த கட்சியின் கமல்நாத் நேற்று மதியம் மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்றார்.

ராகுல் காந்தி அளித்த வாக்குறுதியின் படி, கமல்நாத் முதல்வராக பதவியேற்ற 4 மணிநேரத்தில் முதல் கையெழுத்தாக விவசாயிகளின் விவசாய கடன் தள்ளுபடிக்கான ஆணையை வெளியிட்டுள்ளார். இவரது பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Trending

Exit mobile version