தமிழ்நாடு

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்.. அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

Published

on

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கு நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. முன்னதாக இந்த பகுதிகளில் தேர்தல் நடத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இப்போது இந்த 6 மாத அவகாசம் ஜூன் 4-ந் தேதி நிறைவடைந்தது. ஆனால், மீண்டும் 6 மாத அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் புதிய இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய கோடைக்கால சிறப்பு அமர்வு முன் அன்மையில் விசாரணைக்கு வந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டியவற்றுக்கான பதவிக்காலம் எப்போது நிறைவடைந்தது என்று கேட்டனர். அதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.நரசிம்மா ஆஜராகி, ‘தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சராசரியாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மேற்குவங்க தேர்தலுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாலும், எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை நடத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல்கட்டமாகப் பரிசோதிக்க இயலவில்லை. இதற்குக் குறைந்தபட்சம் 35 நாட்கள் தேவைப்படுகிறது’ என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், ‘எல்லா விவகாரங்களிலும் சாக்குப்போக்கு சொல்ல, கொரோனா நல்ல ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. 6 மாதம் அவகாசம் அளிக்க முடியாது. எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3-வது அலைக்கு முன் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

இந்நிலையில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரியநேரத்தில் தேர்தலை நடத்தவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகி, செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version