இந்தியா

இன்று வெளியாகிறது எல்.ஐ.சியின் நிதிநிலை அறிக்கை: டிவிடெண்ட் அறிவிப்பு இருக்குமா?

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் இன்று 2022 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிடுவதற்காக இன்று இயக்குனர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. கடந்த மார்ச் 31-ஆம் தேதி 2022-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் நிதி ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளை இயக்குனர்கள் கூட்டம் பரிசீலித்து அங்கீகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இயக்குனர்கள் கூட்டத்தில் கடந்த மே 17ஆம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓவின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும் வாய்ப்பு இருந்தால் எல்.ஐ.சி ஐபிஓவில் முதலீடு செய்தவர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என எல்ஐசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எல்.ஐ.சி ஐபிஓ பங்குகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அந்தப் பங்குகளை வாங்குவதற்காக எல்ஐசி ஊழியர்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள், மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர்.

அனுபவம் வாய்ந்த பொருளாதார வல்லுநர்கள் எல்ஐசி ஐபிஓவை வாங்க வேண்டாம் என்று ஆலோசனை கூறிய போதிலும் மிகப்பெரிய அளவில் விற்பனையாகியது. ஆனால் கடந்த மே 17-ஆம் தேதி தேசிய பங்குச்சந்தையில் எல்.ஐ.சி ஐபிஓ பட்டியலிடப்பட்ட முதல் நாளே 8 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தது.

949 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எல்ஐசி ஐபிஓ, முதல்நாளே 872 ரூபாய் என பட்டியலிடப்பட்டதால், இந்த பங்குகளை வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது எல்ஐசி ஐபிஓ ரூ. 823 என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

பெரிதும் லாபம் தரும் என எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இன்றைய போர்டு மீட்டிங்கில் இது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version