தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: என்ன சொன்னார் ஆளுனர்? அமைச்சர் ரகுபதி பேட்டி!

Published

on

ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கவர்னரை சந்தித்த அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டது என்பதும் இந்த மசோதா கவர்னரின் கையெழுத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த மசோதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலாவதி ஆன நிலையில் கவர்னர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கவர்னரை இன்று காலை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்து உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

குறித்த காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என எந்த காரணமும் கிடையாது என்றும் ஆளுநர் விரைந்து இதுகுறித்து முடிவு எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.

மேலும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ரம்மி விளையாட்டுக்களில் வித்தியாசம் உண்டு என்றும் ஆஃப்லைனில் விளையாடிய யாரும் இதுவரை தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அமைச்சர் ரகுபதி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

மேலும் ஆளுநர் ரவி அவர்களிடம் ஆன்லைன் ரம்மி மசோதா குறித்த கேள்விகளுக்கு நேரில் விளக்கம் அளித்துள்ளோம் என்றும் ஆன்லைன் ரம்மியால் மக்களின் பணம் பறி போய் விடுகிறது என்றும் அதுமட்டுமின்றி விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளோம் என்றும், எனவே இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இதனை அடுத்து ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version