தமிழ்நாடு

NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – ‘பல்டியடித்த’ எல்.முருகன்

Published

on

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி, புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட இந்தக் கூட்டணியில் கடந்த சில மாதங்களாக சுமுக உறவு இல்லை. குறிப்பாக அதிமுக – பாஜக இடையே பல விஷயங்களில் முரண் நீடித்து வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான அமித்ஷா, சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு வந்தார். அவர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியிலேயே, துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ‘வரும் தேர்தலிலும் பாஜக உடனான கூட்டணி தொடரும்’ என்றார். ஓ.பி.எஸ் முன்மொழிந்ததை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். அதே நேரத்தில் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அமித்ஷா, கூட்டணிக் கணக்குகள் குறித்து எவ்வித கருத்தையும் சொல்லவில்லை.

மேலும் அதிமுக தரப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் வரும் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்காத தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எங்கள் கட்சியின் தேசியத் தலைமை முடிவெடுக்கும்’ என்று சூசகமாக கூறியிருந்தார். அதே விஷயம் பற்றி இன்று பேசுகையில், ‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது நல்ல உறவோடு இருக்கிறது. எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்’ என்று தான் கூறியதையே மாற்றி தெரிவித்துவிட்டார்.

Trending

Exit mobile version