தமிழ்நாடு

தண்டால் எடுத்து வைரலான ராகுல்: பொறுக்க முடியாமல் பொங்கிய குஷ்பு!

Published

on

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ராகுல் காந்தி. இன்னும் ஒரே மாதத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் ராகுல், தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வழக்கமாக மேடை போட்டுப் பொதுக் கூட்டங்களில் பேசும் பிரச்சார யுக்தியிலிருந்து விலகி ராகுல், பல வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் ராகுல் காந்தி, கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவியர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது ஜூடோ, நடனம், தண்டால் என உற்சாகமாகப் பங்கேற்றார்.

மாணவிகள் சிலரை மேடைக்கு அழைத்த ராகுல் காந்தி, அவர்களுடன் கைகோர்த்து சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். அதைத்தொடர்ந்து தன்னுடன் தண்டால் எடுக்க யாராவது தயாரா? என ராகுல் கேட்டதும், மாணவி ஒருவர் மேடைக்கு வந்தார். அவருடன் போட்டி போட்டு ராகுல் காந்தி தண்டால் எடுத்தார். பின்னர் ஒரு கையாலும் தன்னால் தண்டால் எடுக்கத் தெரியும் எனக் கூறியவாறு அவர் தண்டால் எடுத்தார். இதுதொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் இந்த செயல்கள் எல்லாம் நல்ல தலைமைக்கு அழகா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை குஷ்பு விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒரு தலைவர் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பதைத்தான் சொல்ல வேண்டும். மீனவர்களுடன் தண்ணீரில் குதித்து நீச்சல் அடிப்பதோ, 10-ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவரிடம் குஸ்தி செய்வதோ ஒரு தலைவருக்கு நல்லதில்லை.

ஒரு தலைவராக நீங்கள் என்ன மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றி பெற்றால் இப்படித்தான் பள்ளி மாணவரிடம் குஸ்தி செய்வீர்களா, தண்டால் எடுப்பீர்களா இல்லை மீனவர்களோடு சேர்ந்து தண்ணீரில் குதிப்பீர்களா?

நீங்கள் என்ன நலத் திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்லுங்கள். அதுதான் ஒரு தலைவருக்கு அழகு” என்று குஷ்பு தெரிவித்தார்.

Trending

Exit mobile version