தமிழ்நாடு

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்: எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கும் காங்கிரஸ்!

Published

on

நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழகத்தைப் பிரித்தால் கூட அதனை அதிமுக தலை வணங்கி ஏற்கும் என்று ப.சிதம்பரம் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர், ப.சிதம்பரம் எத்தனை ஆண்டுக் காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன் பூமிக்குத்தான் பாரம். அவருடைய பேச்சைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.

ப.சிதம்பரம் பூமிக்கு பாரமாக இருக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ப.சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் இதற்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸும் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது செய்து சாதனைகளை குறிப்பிட்ட கே.எஸ்.அழகிரி, விபத்தின் மூலம் முதலமைச்சராக பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமுக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும், சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே என்றார். மேலும், சிதம்பரம் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை எப்படிப் பெற்றார் என்பதை வரலாறு அறியும். என்றைக்கும் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள் தான் இவரை தேடி வந்திருக்கின்றன.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எடப்பாடி அவர்களே, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என எச்சரித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

seithichurul

Trending

Exit mobile version