தமிழ்நாடு

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கிருஷ்ணசாமி!

Published

on

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதி தனி தொகுதியாகும். தனித்தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காரணம் கிருஷ்ணசாமி தேவேந்திரகுல சமுதாயத்தை பட்டியலினத்திலிருந்து வெளியேற்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று கூறியிருந்தார். எனவே கிருஷ்ணசாமி பொதுத்தொகுதியில் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தென்காசி தனித்தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் கிருஷ்ணசாமி. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறிய கிருஷ்ணசாமி பல கேள்விகளை தவிர்த்தார்.

கேள்வி: தேவந்திர குல வேளாளர் இனத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி விட்டு தனி தொகுதியில் நீங்கள் போட்டியிடுவது ஏன்?

பதில்: இந்த தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இதை வலியுறுத்துவேன்.

கேள்வி: பொது தொகுதியை கூட்டணியில் கேட்டு வாங்கியிருந்தாலே உங்களுடைய கோரிக்கைக்கு கிடைத்த முதல் வெற்றி இல்லையா?

பதில்: வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை கேட்டு வாங்கியுள்ளோம்.

கேள்வி: அப்படியானால் நீங்கள் பொதுத்தொகுதியை கேட்கவில்லையா?

பதில்: இல்லை நான் தென்காசி தொகுதியைத்தான் கேட்டேன். அது மிகவும் பின்தங்கிய தொகுதி. எனக்கு பரிச்சயமான தொகுதி என்பதால் கேட்டேன்.

கேள்வி: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என கூறியது என்னவாயிற்று?

பதில்: இந்த கேள்வி இப்போது தேவையில்லை

கேள்வி: பரமக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை உரிய இழப்பீடு என்ற உங்கள் கோரிக்கை நிறைவேறி விட்டதா?

பதில்: வேறு கேள்வி கேளுங்கள்.

கேள்வி: உங்களுக்கு ஒரு சீட்டு பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் நீங்கள் கூட்டணி மாறுவதாக ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கபடுகிறதே?

பதில்: உங்களை யார் இந்த கேள்வி கேட்க சொன்னார்களோ, அவர்களும் கூட்டணி மாறி மாறி தான் உள்ளனர்.

கேள்வி: நீங்கள் 2010-க்கு பிறகும், 2011-இல் எம்எல்ஏ ஆன பிறகும் தேவேந்திர குல மக்களுக்காக என்னென்ன செய்தீர்கள்?

பதில்: மதுரைக்கூட்டத்தில் தேவந்திர குல வேளாளர் மக்களை பற்றி மோடியையும், அமித்ஷாவையும் பேச வைத்தேன் அதுவே பெரிய சாதனை தான்.

கேள்வி: பரமக்குடி துப்பாக்கி சூடு நடத்திய அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ,அதே பரமக்குடி மண்ணில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போகிறீர்களா?

இதற்கு பதிலளிக்காமல் கேள்வியை தவிர்த்துச் சென்றுவிட்டார் கிருஷ்ணசாமி.

Trending

Exit mobile version