தமிழ்நாடு

முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்!

Published

on

முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். ஆறுமுகச்சாமி ஆணைய அறிக்கைக்கு பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்து உள்ளனர் என்று தெரியவந்துள்ளது என்றும் இருவரும் நினைத்திருந்தால் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் இனிமேலும் இவர்களுடன் தொடர்ந்து அரசியல் செய்ய தயாராக இல்லை என்றும் கோவை செல்வராஜ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கோவை செல்வராஜ் அவர்களை திமுகவில் இணைக்க அமைச்சர் செந்தில்பாலாஜி முயற்சித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் கோவை செல்வராஜ் இணைந்தார். அப்போது உடன் அமைச்சர் செந்தில்பாலாஜி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் உள்ள பல பிரபலங்கள் அடுத்தடுத்து திமுக மற்றும் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் மேலும் ஒரு பிரபலம் திமுகவில் இணைந்து அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version