தமிழ்நாடு

தமிழ்நாட்டில் என்னப் பிரச்சனை; மாநிலத்தை எதற்குப் பிரிக்க வேண்டும்?- திருமா கேள்வி

Published

on

தமிழ்நாட்டில் என்னப் பிரச்சனை உள்ளது, எதற்காக இரண்டும், மூன்று மாநிலங்களாக அது பிரிக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் எம்.பி.

தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில வலதுசாரி சார்புடையவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.

திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து, இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று அழைத்து வருகிறது. இப்படிச் சொல்வதால் கொதிப்படைந்துள்ள வலதுசாரிகள், ‘கொங்குநாடு’ கோஷத்தை எழுப்பி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இது பற்றி தன் கருத்தை தெரிவித்து உள்ள திருமா, ‘தமிழ்நாட்டிலிருந்து என்னப் பிரச்சனை இருக்கிறது. தமிழ்நாட்டை பிரிக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது. சாதியவாதிகளின் கோரிக்கையை, மதவாதிகளின் கோரிக்கையை, பிற்போக்கு வாதிகளின் கோரிக்கையை மக்களின் கோரிக்கையாக காட்ட முயல்கிறது பாஜக. அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கின்றது.

இந்த விஷயத்தைக் கிளப்பியதற்காக பாஜகவுக்குத் தக்க பதிலடி கொடுப்போம். வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’ என்று உறுதிகாய கூறியுள்ளார்.

Trending

Exit mobile version