தமிழ்நாடு

கொடநாடு கொலை: சயனின் அதிரடி வாக்குமூலம்!

Published

on

கொடநாடு கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக கேரளாவை சேர்ந்த சயன் மற்றும் மனோஜ் கூறி வருவது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல ஆதாரங்களை வைத்துள்ளார் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்.

மேத்யூ சாமுவேலின் உதவியுடன் இந்த வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர் சயன் மற்றும் மனோஜ். இது தொடர்பாக சயன் ஒரே மாதிரியாக வாக்குமூலம் அளித்து வருகிறார். இது அதிமுக தரப்புக்கு எதிராக உள்ளதால் அரசியல் வட்டாரம் பரபரப்பாக உள்ளது. எல்லா இடங்களிலும் சயன் கொடுத்திருக்கும் வாக்குமூலம் ஒரே மாதிரியாக இருப்பதால் தமிழக காவல்துறையால் அடுத்தகட்டத்துக்கு நகர முடியவில்லை.

காவல்துறை, நீதிமன்றம் என எல்லோரிடமும் சயன் சொல்லியிருக்கும் வாக்குமூலம் இதுதான், ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன்ல தொடக்கத்தில் டிரைவராக இருந்தார் கனகராஜ். எடப்பாடியை சேர்ந்த சரவணன் அவரை வேலைக்கு சேர்த்துவிட்டார். கனகராஜுக்கு போயஸ் கார்டனில் செல்வாக்கு அதிகமாகிக் கொண்டிருந்ததால் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா அம்மாகிட்ட போட்டுக் கொடுத்து அவரை காலி பண்ணினாரு.

டிரைவர் வேலையில் இருந்து தூக்கினாலும் போயஸ் கார்டனுக்கு போய்ட்டு வந்துட்டுதான் இருந்தார் கனகராஜ். ஜெயலலிதா அம்மா இறந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றதும் அவரைப் பார்க்கப் போறதா சொன்னார் கனகராஜ். அவருக்குதான் உன்னை பிடிக்காதே என்று நான் கேட்டேன். அதுக்கு கனகராஜ், இப்போ அதெல்லாம் பார்த்தால் ஆகுமா? அவருதான் முதல்வர். எங்க ஊருக்காரரு என்று சொல்லிவிட்டுப் போனவர், முதல்வருடன் செல்ஃபி எல்லாம் எடுத்து வந்து என்னிடம் காட்டினார்.

அந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி கனகராஜிடம் கொடநாட்டில் ஆவணங்களை எடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். இந்த வேலைக்கு தமிழ்நாட்டு ஆட்கள் வேண்டாம், கேரளா ஆட்களை வெச்சு செய்யச் சொல்லியிருக்காரு எடப்பாடி பழனிச்சாமி. நானும் கனகராஜும் முன்னரே நண்பர் என்பதால் என்னிடம் விஷயத்தை சொல்லி ஆட்கள் கேட்டார். கேரளாவுல எனக்கு தெரிஞ்ச, வேற வேல பார்த்துட்டு இருக்கிற 10 பேரை நானே செலக்ட் பண்ணினேன்.

கொடநாட்டுல போய் எடுக்க வேண்டியதை எடுத்துட்டா கிடைக்கும் 5 கோடியை நாம ஷேர் பண்னிக்கலாம் என கனகராஜ் சொன்னார். அதை நம்பித்தான் நான் ஆட்களை ரெடி பண்ணினேன். ஒரே இடமா இல்லாமல் கேரளா முழுக்க இருந்து வேற வேற வேலை பார்க்கிறவங்களைத்தான் இதுக்காக செலக்ட் பண்ணினேன். டாகுமெண்ட் எடுக்கப் போறோம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். மற்ற எல்லோருக்கும் பல கோடி பணத்தை எடுக்கப் போறோம்னுதான் சொல்லி கூட்டிட்டுப் போனோம்.

வந்த யாருக்கும் இது ஜெயலலிதா வீடுன்னு தெரியாது. பலருக்கு ஜெயலலிதாவையே தெரியாது. அதனால ஆட்களை கூட்டிட்டு வருவது எனக்கு வசதியாக இருந்தது. எடப்பாடி பழனிசாமிதான் இதை செய்யச் சொன்னாரு என்பது எங்க இரண்டு பேருக்கும்தான் தெரியும். கனகராஜ் இப்போ உயிரோடு இல்லை. நானும் இருக்கக் கூடாதுன்னுதான் நினைக்கிறாங்க. கேரளாவுக்கு நான் போனாலும் என்னை யாராவது பின் தொடர்ந்துட்டே இருக்காங்க.

நான் கொடநாட்டுக்குள்ள கொள்ளையடிக்க போனேன் என்பது என் வீட்டிலோ என் மனைவிக்கோ தெரியாது. அது தெரியாமலேயே அவ செத்துப் போயிட்டா. படுத்தா தூக்கம் வரவே மாட்டேங்குது. எதுக்காக என்னையும் குழந்தையும் கொலை செஞ்சாங்க. நீங்க என்ன தப்பு செஞ்சீங்க? நாங்க என்ன தப்பு செஞ்சோம்? என கண்ணை மூடினா என் மனைவி வந்து கேட்கிறா. அவளுக்கு நான் என்ன பதில் சொல்றது?

இதை ஏன் முதல்லயே சொல்லவில்லை என எல்லோரும் கேட்கிறாங்க. சொல்றதுக்கு முன்னாடியே கொலை செய்ய திட்டம் போட்டவங்க, சொன்னால் என்னை விட்டு வைப்பாங்களா? நேரம் பார்த்து சரியான ஆள் மூலமாக வெளியே கொண்டு வரணும்னுதான் பார்த்துட்டு இருந்தேன். அப்போதான் மேத்யூ பற்றி சொன்னாங்க. நான் தான் அவரைத் தேடிப் போனேன். விஷயத்தை எல்லாம் சொல்லி அவரை கொடநாட்டுக்கும் அழைச்சிட்டு வந்தேன்.

என்னவெல்லாம் செஞ்சோம் என்பதை அவருகிட்ட ஒவ்வொரு இடமாக கூட்டிட்டுப் போய் காட்டினேன். அதைத்தான் அவரு மீடியாவுக்கு சொல்லி இருக்காரு. எந்த அரசியல் கட்சிக்காரங்களும் என்னை பேச சொல்லவில்லை. நான் பேசுறது எல்லாம் என் மனைவிக்காக, என் குழந்தைக்காக. சயனின் இந்த வாக்குமூலம் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது நெருக்கடியாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version