இந்தியா

ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்துவர்!

Published

on

கர்நாடக மாநிலம், உடுப்பியில் கிறிஸ்துவர் ஒருவர் 2 கோடி ரூபாய் செலவில் விநாயகர் கோவில் கட்டியுள்ளார்.

உடுப்பி மாவட்டம், ஷிர்வா பகுதியைச் சேர்ந்தவர் கேப்ரியல் எஃப் நாசரேத். இவர் 10-ம் வகுப்பு முடித்த பிறகு மும்பைக்கு வேலை செய்யச் சென்றுவிட்டார். மும்பையில் பல்வேறு வேலைகளைச் செய்த கேப்ரியல், தனது கடின உழைப்பால் ஹாலோ பிளாக் செய்யும் தொழிற்சாலை ஒன்றையும் தொடங்கியுள்ளார். அதன் மூலம் நல்ல வருமான கிடைக்க மகிழ்ச்சியாக இவரது வாழ்க்கை சென்றுள்ளது.

பிறப்பு மற்றும் நம்பிக்கையில் கேப்ரியல் கிறிஸ்த்துவராக இருந்தாலும் இவருக்குச் சித்தி விநாயகர் மீதும் அதிக ஈடுபாடு உண்டு. எனவே 55 வருடம் மும்பையில் தனது வாழ்வைக் கழித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய கேப்ரியல் 2 கோடி ரூபாய் செலவில் தனது பெற்றோரின் நினைவாக, பூர்வீக இடத்தில் சித்தி விநாயகர் கோவில் ஒன்றைக் கட்டியுள்ளார். அதில் 36 இஞ்ச் அளவில் விநாயகர் சிலையை அமைத்துள்ளார்.

கோவில் மட்டுமல்லாமல், இந்த கோவிலின் அர்ச்சகர்கள் அங்கேயே குடும்பத்துடன் இருக்க வீடும் கட்டிக்கொடுத்துள்ளார்.

இந்த சித்தி விநாயகர் கோவிலின் திறப்புவிழா இன்னும் முன்கூட்டியே நடந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இப்போது நடைபெற்றுள்ளதாக் கேப்ரியலின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்தி விநாயகர் கோவிலை வெற்றிகரமாகக் கட்டியமைக்க இஞ்சினியர் ஷில்பி நாகேஷ் ஹெக்டே மற்றும் கேரியலின் நண்பர்கள் சதீஷ் ஷெட்டி, ரத்தினகுமார் உள்ளிட்டவர்கள் உதவியதுடன், கோவில் கமிட்டி உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

கேப்ரியலின் இந்த முயற்சி மதத்தைத் தாண்டி, ஒரு நல்ல தேய்வ நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்துள்ளது என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version