சினிமா செய்திகள்

கர்ணன் படத்தின் ‘ஆண்டு சர்ச்சை’- உதயநிதியின் தலையீட்டால் முடிவுக்கு வருகிறது!

Published

on

தனுஷ் நடிப்பில், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது ‘கர்ணன்’ திரைப்படம்.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் ‘கர்ணன்’. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் பிரச்சனை பற்றிய பதிவாக அமைந்துள்ள கர்ணன் திரைப்படத்திற்கு தமிழக அளவிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரிலீஸான ஒரு சில நாட்களில் கர்ணன், சுமார் 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது. கொடியன்குளத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கர்ணன் திரைப்படம் எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த கொடியன்குளம் வன்முறை என்பது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 1995 ஆம் ஆண்டு நடந்தது என்றும், ஆனால் படத்தில் சம்பவங்கள் 1997 ஆம் ஆண்டு, கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நடந்தது போல காட்சிப்படுத்தப் பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழுவுடன் பேசியுள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளரும், கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின்.

இது பற்றி அவர், ‘‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் எஸ்,தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகிய மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி. என ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version