தமிழ்நாடு

அதிமுகவில் கராத்தே தியாகராஜன்? ஜெயக்குமார் கருத்துக்கு பதில்!

Published

on

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது தமிழக காங்கிரஸ் தலைமை. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக மறைமுகமாக திமுகவை தாக்கினார் கராத்தே தியாகராஜன்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் கராத்தே தியாகராஜன். அதில், உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தபோது 2007 நவம்பர் 1-ஆம் தேதி தனது நண்பருடன் தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றது, விமானம் ஏறும்போதுதான் முதல்வராக இருந்த கலைஞருக்கே தெரியும். மத்திய அரசின் அனுமதி பெறாமல் அந்த பயணத்தை மேற்கொண்டார் என்று அப்போது சர்ச்சைகள் எழுந்தன என்பதை நினைவூட்டுகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கூறியிருந்தார்.

இதனால் கராத்தே மீண்டும் அதிமுகவுக்கே செல்கிறார் என்ற கருத்து நிலவி வந்தது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், கராத்தே தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை குறித்தும், அவர் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கராத்தே தியாகராஜன் அதிமுகவுக்கு எதிரி கிடையாது. அதிமுகவில் இணைக்கக் கூடாத நபர்கள் பட்டியலில் அவர் இல்லை. தினகரன், சசிகலா சார்ந்தோர்களைத் தவிர உலகத்தில் வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம். கராத்தே தியாகராஜன் அதிமுகவில் இணைவது குறித்து கட்சி முடிவெடுக்கும் என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கராத்தே தியாகராஜன், நான் அடிப்படையில் காங்கிரஸ்காரன். திமுக தலைவர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் பற்றி கூறியதை அதிமுகவினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். நான் பொதுவாகத்தான் கூறினேன். நான் இப்போது காங்கிரஸிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதால் பல கருத்துக்களை சுதந்திரமாக சொல்ல முடிகிறது. அந்த வகையில் நான் வெளியிட்ட கருத்தை ஜெயக்குமார் ஆதரித்துள்ளார். இதில் வேறு அரசியல் இல்லை என்றார்.

Trending

Exit mobile version