தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட உள்ள கனிமொழி?

Published

on

திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற உள்ள ஊராட்சி சபைக் கூட்டங்களில் கனிமொழி கலந்துகொண்டு பேசவுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதனை சந்திக்க நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி மக்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் திருவாரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியது போல கனிமொழிக்கு தூத்துக்குடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அதில் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு கனிமொழி சிறப்புரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது. மேலும் 27-ஆம் தேதி வரை கனிமொழி தூத்துக்குடி முழுவதும் பல இடங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார்.

மாநிலங்களவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் கனிமொழி சிறந்த உறுப்பினர் என்ற விருதை பெற்றுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்துக்காக மாநிலங்களை பலமுறை கனிமொழி குரலெழுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரம், இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் தூத்துக்குடியில் அமைத்தல் போன்றவற்றுக்கு குரல் கொடுத்த கனிமொழி அம்மாவட்டத்திலுள்ள ஸ்ரீவெங்கடேசுவரபுரம் கிராமத்தை தத்தெடுத்து அங்கு பல நலத்திட்ட உதவிகளையும் செய்துவருகிறார்.

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். தூத்துக்குடியில் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் கனிசமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version