தமிழ்நாடு

நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்: மம்தாவுக்கு கனிமொழி நேரில் சென்று ஆதரவு!

Published

on

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று திமுகவின் ஆதரவை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சிபிஐக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை திரும்ப பெறப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 2-ம் தேதி மாலை கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த எட்டு சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து உரிய அனுமதி இல்லாமல் காவல் ஆணையரிடம் விசாரிக்க வந்ததாகக் கூறி முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக செயல்படுவதால் பிரதமர் மோடி மேற்கு வங்க அரசைப் பழிவாங்கும் நோக்கி இதுபோன்று செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் அவர். மம்தாவின் செயலுக்கு மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தாலும், எதிர்க்கட்சிகளின் அமோக ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது.

விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மம்தாவை சந்தித்து அவரது போராட்டத்துக்கு திமுகவின் ஆதரவைத் தெரிவித்தார் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. அப்போது திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் வந்ததாக தெரிவித்த கனிமொழி, ஜனவரி 19-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று புரிந்துகொண்டு, மம்தாவுக்கு எதிராகப் பிரதமர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றார்.

மேலும், மாநில அரசுகளின் அதிகாரத்தை ஒடுக்குவதில் மோடி அரசு அக்கறை காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் இப்போது மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ஒன்று திரண்டுள்ளது, நாட்டின் ஒவ்வோர் அமைப்பையும் சிதைக்க நினைக்கும் பாஜகவின் முயற்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும். மம்தா பானர்ஜி மீண்டும் ஒருமுறை நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் என்று கனிமொழி தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version