இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: மக்களவையில் கனிமொழி சரமாரி கேள்வி!

Published

on

தூத்துக்குடி மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினரான கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி நேற்று மக்களவையில் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தார்.

கேள்வி நேரத்தில் இது தொடர்பாக பேசிய கனிமொழி, தூத்துக்குடியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது 2018 மே 22-ஆம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தால் நாடே அதிர்ந்தது. இது தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி சிபிஐ விசாரணை நடத்தி 4 மாதங்களுக்கு வழக்கை முடிக்க வேண்டும் என்று 2018 ஆகஸ்டு 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

துப்பாக்கிச் சூடு நடந்து ஒருவருடத்துக்கு மேல் ஆகியும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் சிபிஐ ஒரு காவலரின் பெயரை கூட எஃப்ஐஆரில் சேர்க்கவில்லை. சிபிஐ விசாரணையின் நிலை இப்படி இருந்தால், தூத்துக்குடி மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்? என்றார் கனிமொழி.

மேலும், துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமான அளவு இல்லாததால் உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள். துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு வேலை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இளையோர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 17 வயதே ஆன ஸ்னோலின் என்ற இளம் பெண் தலையில் குறிபார்த்து சுட்டுக் கொல்லப்பட்டார். தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என தனது குரலை ஓங்கி ஒலித்தார் கனிமொழி.

seithichurul

Trending

Exit mobile version