விமர்சனம்

கனா விமர்சனம்!

Published

on

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் மீடியா ப்ரிவியூ ஷோ முன்னதாக திரையிடப்பட்டது. அதை பார்த்த பின்னர் இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே எழுதியுள்ளோம்.

அருண்ராஜா காமராஜ் நம்ம ஜெயிச்சுட்டு சொன்னாதான் உலகம் கேட்கும் என படத்தின் வசனத்தின் மூலம் தனது வலியை பதிவு செய்துள்ளார். ஆனால், அவர் ஜெயிக்கும் முன்னரே அவரது நண்பர் சிவகார்த்திகேயன் அவருக்கு இந்த முத்தான வாய்ப்பை அளித்து அவரது கனாவை பலிக்க வைத்து ஜெயிக்க வைத்துள்ளார்.

இறுதிச்சுற்றுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கையூட்டும் ஸ்போர்ட்ஸ் திரைப்படம். அதிலும், இந்தியாவிலேயே ஏன் உலக அளவிலேயே முதன் முறையாக பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் கனா.

விவசாயி முருகேசனின் மகள் கெளசல்யா, தனது தாத்தா இழப்பிற்கு கூட அழாத தனது அப்பா, கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்கு கண்ணீர் விடுவதைக் கண்டு, கிரிக்கெட் மீது சிறு வயதிலே நாட்டம் கொள்கிறார்.

ஆண்கள் மட்டுமே கிரிக்கெட் ஆடும் ஊரில், ஒரு பெண் எப்படி கிரிக்கெட் விளையாடி, பயிற்சி பெற்று இந்திய மகளிர் அணியில் விளையாடுகிறார் என்பதை அத்தனை வலிகளுடனும், முயற்சிகளுடனும், நேர்த்தியுடனும் இயக்குநர் அருண் ராஜா காமராஜ் செதுக்கியுள்ளார்.

தமிழ்நாட்டு பெண்ணுக்கு இந்திய அளவில் இடம் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், மாதவிடாய் காலத்தில் வீராங்கனைகளுக்கு ஏற்படும் பிரச்சனை என பலவற்றை பலமாக பேசியுள்ளது கனா திரைப்படம்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், வயல் கிரவுண்ட் முதல், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் வரை காட்சிக்கு தேவையான ஒளிப்பதிவு, நேர்த்தி என திரையில் பல மேஜிக்குகளை செய்துள்ளார்.

பெரியார் கருத்துக்களை கொண்ட விவசாயி கதாபாத்திரத்தில் முருகேசனாக அருமையான நடிப்பை சத்யராஜ் வெளிப்படுத்தியுள்ளார். கிராமத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம் என்ற பெரியார் கருத்து மிக வலிமையாக படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் இருந்து பல ரியல் கிரிக்கெட் வீராங்கனைகளை நடிக்க வைத்ததும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நிஜ கிரிக்கெட் வீராங்கனையாக பயிற்சி பெற்று படத்துக்காக உருமாறுவதும் அவரது சிறந்த நடிப்பாற்றலை மேலும் வெளிப்படுத்துகிறது.

கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார். சேர்த்துத்தானே ஆகவேண்டும்.

கிராமத்தில் பிறக்கும் ஒரு பெண் தெருவில் கிரிக்கெட் விளையாடுவதே பெரிய விசயம். ஊரு ஒன்னுக்கு ரெண்டா பேசும். அதை எல்லாம் தாண்டி அந்த பெண் இந்திய அணியில் இடம்பிடிக்க போனால், தமிழ்நாட்டு வீராங்கனை என்ன மாதிரியான எதிர்ப்புகள் கொடுமைகள் கிளம்பும் என விளையாட்டில் உள்ள அரசியலை மேலும் ஒரு முறை ஆணித்தரமாக கூறியுள்ள கனா நிச்சயம் இந்த வார படங்களில் வெற்றி பெறுவார் என்பது நிதர்சனம்.

கனா – சினிமா ரேட்டிங்: 3.75/5.

seithichurul

Trending

Exit mobile version