தமிழ்நாடு

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தோல்வி: வானதி வெற்றி வித்தியாசம் எவ்வளவு?

Published

on

நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. அதே நேரத்தில் அதிமுக ஆட்சியை இழந்தாலும் படு தோல்வி அடையவில்லை என்பதும் பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மூன்றாவது அணியாக தேர்தல் களத்தில் இறங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமார் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் ஒரு சில நேரங்களில் முன்னணியில் இருந்தாலும் அவர் இறுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் அவர்களிடம் தோல்வியடைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு 51 ஆயிரத்து 481 வாக்குகளும் வானதி ஸ்ரீனிவாசனுக்கு 53 ஆயிரத்து 209 வாக்குகளும் கிடைத்தது. இதனை அடுத்து ஆயிரத்து 728 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 42383 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தனது தோல்வி குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்.

Trending

Exit mobile version