விமர்சனம்

கைதி – ஒரு தரமான ஆக்சன் திரைப்படம்

Published

on

ஒரு குறிப்பிட்ட திரை வகைமையினை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் திரைப்படங்கள் குறைவு. அதுவும் அக்குறிப்பிட்ட வகைமையிற்கு நியாயம் செய்யும் வகையில் ஒட்டுமொத்த திரைப்படமும் அமைவதும் குறைவு. இத்தகைய நிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட வகைமையினை மட்டும் கொண்டு அதற்கு முழுக்க முழுக்க நியாயம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது ‘கைதி’ திரைப்படம்.

இதற்கு முன் மாநகரம் என்னும் திரைப்படத்தின் படத்தின்வழி தனக்கெனத் தனி முத்திரையினைப் பதித்துக்கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இதிலும் தனது தனித்துவமான திரைமொழியின்வழி மீண்டும் தனது முத்திரையினைப் பதித்துள்ளார். குறிப்பிட்ட சூழல்கள்தான் ஒரு குறிப்பிட்ட நிகழ்வினைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று இந்த இயக்குநர் ஆழமாக நம்புகிறார் போலும். அதன்வழி இவரின் முதல் படம் ஒரு நகரத்தினுள் நிகழும் வேறுபட்ட நிகழ்வுகளில் சிக்குண்ட மனிதர்கள் ஒருவருக்கு மற்றொருவர் அவர்களை அறியாமலே உதவுவதை மையமாகக் கொண்டதாகும். அதேபோல் இத்திரைப்படதிலும் பல்வேறு தனித்தனியான நிகழ்வுகளின் கோர்வை ஒரு குறிப்பிட்ட நிகழ்வினைக் கட்டமைப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அளவு கொண்ட போதைப்பொருளினைச் சிறப்பு காவல் பிரிவு கைப்பற்றுகிறது. அதனால் கைப்பற்றிய காவலர்களைக் கொல்லவும் போதைப்பொருளினை மீட்கவும் தீட்டம் தீட்டுகிறது போதைபொருள் கடத்தல் கும்பல். ஐஜியின் கெஸ்ட் ஹவுசில் நடக்கும் பார்டியில் உயர்அதிகாரிகள் அனைவரின் உயிருக்கும் சிக்கல் ஏற்படுகிறது. அவர்களைக் காப்பாற்ற 80கி.மீ. செல்லவேண்டும். அதற்கு உதவுகிறார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்து தனது மகளைப் பார்க்க வெளிவரும் கைதி. இவர்களை ஒரு குழுத் துரத்துகிறது.

மற்றொரு புறத்தில் போதைபொருள் வைத்திருக்கும் காவல்துறை அலுவலகத்தில் ஒரு கும்பல் தாக்க நெருங்குகிறது. அதனால் காவலர்கள் அனைவரும் காவல் நிலையத்தினை விட்டு வெளியேறிவிடுகின்றனர். அக்காவல் நிலையத்தில் புதிதாக வேலையில்சேர்ந்த கான்ஸ்டெபில் மட்டும் இருக்கிறார், இவருடன் ஐந்து கல்லூரி மாணவர்கள் ஒரு கேசுக்காக வந்துள்ளனர். இவர்கள் எவ்வாறு அக்காவல் நிலையதிற்கு வரும் பெரும் கும்பலைத் தடுத்தனர் என்பதும் கைதி தனது மகளைப் பார்த்தானா என்பதும் இப்படத்தின் மையக்கதை.

படத்தில் கதாநாயகி இல்லை, பாடல்கள் இல்லை என்று தெரிந்தபின்பு திரையரங்கினுள் வரும் பார்கையாளனை முதல் அரைமணி நேரத்தில் படத்திற்குள் இருக்கும் அனைத்து கதைப்போக்குகளையும் தெளிவாக எடுத்துரைத்து ஒரு நேர்கோட்டிற்குள் கொண்டுவந்துவிடுகிறார் இயக்குநர். அதன்வழி படத்தைப் பார்க்கும் பார்வையாளர் வேறுஎந்த சிக்கலும் இல்லாமல் தனது திரைமொழியினுள் இழுத்துச் சென்று தான் சொல்ல வருவதையும் காண்பிக்க முயன்றதையும் காண்பித்துப் பிரமிக்க வைக்கின்றார்.

படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடத்திருக்கின்றனர். அதேபோல் அனைத்து தொழிற்நுட்பப் பிரிவினரும் தனது பங்கினைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர்.

இப்படத்தில் இரண்டு முக்கியமான விசயங்கள் காணப்படுகின்றன. ஒன்று, ஒரு குறிப்பிட்ட சூழல்தான் ஒரு மாஸ் ஹீரோப் பிம்பத்தினைக் கட்டமைக்கின்றது. அச்சூழலினை எதிர்கொள்ளும் எந்த கதாபாத்திரமானாலும்சரி அந்த மாஸ் ஹீரோப் பிம்பத்தைப் பெற்றுவிடும் என்பதைப் பறைசாற்றுகிறது. அதன்படி இத்திரைப்படத்தில் கார்த்திக்கு மட்டுமல்லாது பல்வேறு கதாபாத்திரங்களுக்கும் மாஸ் சீன்கள் உள்ளன. அவற்றினைத் திரைக்கதைக்குள் இருக்கும் சுவாரஸ்சியம்தான் கட்டமைக்கின்றது, இதற்கு ஒளிப்பதிவும், இசையும் துணைபுரிந்து ஒரு மாஸ் சீனை உருவாக்குகின்றது.

இரண்டு, ஒரு சிறந்த கதை என்பது உணர்வுகளை அடிநாதமாகக் கொண்டிருக்க வேண்டும். எந்த வகைமை திரைப்படமாக இருந்தாலும் சரி அது கடத்த முயல்வது மனித உணர்வினை மட்டுமே. அதனைத் தெளிவாக கடத்திவிட்டால் போதும். மற்றவை அனைத்தும் அதன்மீது இயல்பாக படர்ந்துவிடும். இத்திரைப்படம் மகள் – அப்பா என்ற உறவி னை அடிதளமாகக் கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடும் சிறப்பாக அமைந்துள்ளது அதனால் அதன்மீது கட்டமைக்கப்பட்ட ஆக்சன் திரைக்கதை வலுவாக நிற்கின்றது.

இத்திரைப்படம் ஒரு தரமான ஆக்சன் திரைப்படமாகவும் பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் திருவிழாவிற்கு ஏற்றத் திரைப்படமாகவும் இருக்கின்றது.

seithichurul

Trending

Exit mobile version