உலகம்

‘டியர் ஜோ பைடன்…’- அமெரிக்க அதிபருக்கு, கைலாசா அதிபர் நித்யானந்தா எழுதிய திறந்த மடல்

Published

on

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். அதைப் போலவே துணை அதிபராக கமலா ஹாரீஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் கைலாசா நாட்டு ‘அதிபர்’ சாமியார் நித்தியானந்தா பாராட்டுகள் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் பணமோசடி வழக்கு, ஆள் கடத்தல் வழக்கு, பாலியல் வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. அவரைப் பல்வேறு மாநில போலீஸ் தேடி வருகிறது. மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளும் தேடி வருகிறது. அவர்களுக்கு எல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு கடந்த பல மாதங்களாக தலை மறைவாக இருந்து வருகிறார் நித்தியானந்தா.

குறிப்பாக கரீபீயத் தீவுகளில் ஒரு தனியான தீவை வாங்கிப் போட்டு, அதை ‘கைலாசா’ என்று நித்தியானந்தா பெயர் மாற்றி விட்டதாகவும் தகவல் பரவின. கைலாசாவுக்கு என்று தனி நாணயம், தனி அரசு, தனி பாஸ்போர்ட் என எல்லாம் ரெடியானதாம். தொடர்ச்சியாக நித்தியானந்தா, கைலாசாவுக்கு மக்கள் வருகை தர வேண்டும் என்று சிவப்புக் கம்பளமும் விரித்தார்.

அதே நேரத்தில் உலக வரைபடத்தில் இந்த நாடு எங்கு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையும் இந்த நாட்டுக்குப் போதுமான ஒப்புதல்களை வழங்கவில்லை. இதனால், இன்று வரை நித்தியானந்தாவின் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அவர் எங்கு உள்ளார் என்பதை அறிய முடியாமல் இந்தியப் புலனாய்வு அமைப்புகளும் திணறி வருகின்றன.

இந்நிலையில் அவர் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

‘டியடர் மிஸ்டர். அதிபர் மற்றும் மேடம் துணை அதிபர் அவர்களே,

உலகம் முழுவதும் 200 கோடி மக்களால் பின்பற்றப்படும் இந்து மதத்தின் பிரதிநிதியாக ஶ்ரீகைலாசா, அமெரிக்காவின் 46வது அதிபர் மற்றும் 49வது துணை அதிபராக பதவியேற்ற உங்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

உங்களுக்கு என் ஆசீர்வாதம். உங்கள் தலைமையின் கீழ் அமெரிக்கா வளர்ந்து, ஞானமடைந்த எதிர்காலத்தை அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்க வேண்டும் என அசீர்வதிக்கிறேன். உங்கள் தலைமையின் கீழ் அமெரிக்கா, எப்போதும் போல மிகுந்த பொறுப்புடைய உலக தலைமை வகிக்கவும், இந்த உலகம் வளர்ச்சி அடையவும் வாழ்த்துகிறேன்’ என்று நித்தியானந்தா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version