தமிழ்நாடு

அவன், இவன் என ஏக வசனத்தில் பேசுவதா… கடம்பூர் ராஜுவுக்கு நாவடக்கம் தேவை: பாஜக பதிலடி!

Published

on

அதிமுக-பாஜக இடையே நிலவி வந்த வார்த்தை போர் சற்று ஓய்ந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கஃபம்பூர் ராஜூ அண்ணாமலை குறித்து கத்துக்குட்டி என விமர்சித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

#image_title

நாராயணன் திருப்பதி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில், அதிமுகவின் கடம்பூர் ராஜூ, பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியுள்ளதோடு மரியாதைக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை அவர்கள் டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் அவன் , இவன் என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு, அரசியலில் கத்துக்குட்டி என்று விமர்சித்து பேசியிருப்பது அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு.

டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுகதான் என்பதை கடம்பூர் ராஜு உணர வேண்டும். தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி, நாகரீக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்க தான் அண்ணாமலை அவர்களின் அரசியல் பிரவேசம் என்று கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல. மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தமிழகத்தில் தான் என்பதையும், நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உள்ள பாஜக அரசுக்கு மாற்றாக கண்ணுக்கெட்டிய காலம் வரையில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை என்று தெரியாமல் பேசுகிறீர்கள் கடம்பூர் ராஜு அவர்களே!

#image_title

அண்ணாமலை அவர்கள் செல்வி ஜெயலலிதா அவர்களை பெருமைப்படுத்தியே பேசினார் எனபதை கூட புரிந்து கொள்ள முடியாத, ஒரு சிறந்த தலைவரை போல், தான் இருப்பேன் என்று அண்ணாமலை அவர்கள் பேசியதில் ஜெயலலிதா அவர்களின் உறுதியான தன்மையை உணர்த்தித்தான் என்பதையும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றும் தெரியாத கத்துக்குட்டி கடம்பூர் ராஜு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எது பெருமை, எது சிறுமை என்பது கூட புரிந்து கொள்ள முடியாதவர் செய்திதுறை அமைச்சராக எப்படி இருந்தார் என்பது வியப்பளிக்கிறது.

கட்சியை அண்ணாமலை அவர்கள் காலி செய்து விடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு அவர்களே, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள். நெருக்கடி நேரங்களில் கை கொடுத்து, தோளோடு தோள் நின்றவர்களை அவதூறு பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சியுங்கள். இல்லையேல் காலம் பதில் சொல்லும் என்றார் நாராயணன் திருப்பதி.

Trending

Exit mobile version