கிரிக்கெட்

INDvENG- ‘பயப்படாம விளையடுங்கப்பா!’- இங்கி., வீரர்களுக்கு ஜோ ரூட் ஓப்பன் ரிக்வஸ்ட்

Published

on

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள், அச்சம் கொள்ளாமல் விளையாட வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி, 2 – 1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்றுள்ளது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து அணி, மூன்றாவது போட்டியைப் போல முழுவதும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாட வேண்டும் என்கிற முனைப்போடு களமிறங்குகிறது.

இருப்பிடும் மூன்றாவது டெஸ்டைப் போலவே நான்காவது டெஸ்டிலும் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்ய திணறுவார்கள் என்றே தெரிகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர்கள், இந்த ஆட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஜோ ரூட், ‘இந்தியா போன்ற நாட்டில் ஒரு பேட்டிங் குழுவாக எப்படி வெற்றி பெற வேண்டும் என்கிற திறனும் ஆற்றலும் எங்களிடம் உள்ளது. அதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இந்த மனப்பான்மையை முதன்மையாக வைத்துக் கொண்டு இன்னும் தைரியத்துடனும் சுதந்திரத்துடனும் ஆட்டத்தை அணுக வேண்டும். அப்படிச் சொல்வதனால் களத்தில் இறங்கியவுடன் மனம் போன போக்கில் பேட்டை சுழற்றிக் கொண்டிருக்கக் கூடாது. சூழலைப் பார்த்து பயப்படாத வண்ணம் நம் ஆட்டத்தை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே சொல்ல வருகிறேன்.

என்ன செய்வதென்று தெரியாமல் க்ரீஸிலேயே மாட்டிக் கொள்வது, இரண்டு மனநிலைகளுடன் பந்தை அணுகுவது உள்ளிட்டவைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சுதந்திரமாக களத்திற்குச் சென்று தாம் விரும்பிய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும், ரன்கள் குவிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் இங்கிலாந்து வீரர்கள் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிவடைந்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் அந்த அணி மீது அதிக அழுத்தம் உள்ளது.

 

Trending

Exit mobile version