தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு!

Published

on

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்களுக்கு குறைவாக வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் சில நிபந்தனைக்கு உட்பட்டு அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி கூட்டுறவு வங்கியில் ஐந்து பவுனுக்கு குறைவாக நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த தகுதியின் அடிப்படையில் மட்டும் கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதியவர்கள், ஏழை எளிய விவசாயிகள் விவசாயத்திற்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இது குறித்து கடந்த ஒருமாதமாக கடன் பெற்றவர்களின் விபரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த ஆய்வின் அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார்.

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்வதன் காரணமாக அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய மற்றொரு வாக்குறுதியான கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் அடமான வைத்து பெறப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version