தமிழ்நாடு

தம்பிதுரைக்கு ஜெயக்குமார் ஆதரவு: பாஜக, அதிமுக கூட்டணி சாத்தியமாகுமா?

Published

on

மக்களவையில் நேற்று பேசிய மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கர்ஜித்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் அவையிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தம்பிதுரை பேசியதில் தவறில்லை என அவருக்கு ஆதரவாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதத்தின் போது நேற்று மக்களவையில் அதிமுக சார்பாக பேசினார் தம்பிதுரை, ஜிஎஸ்டி, தூய்மை இந்தியா, பணமதிப்பழிப்பு, மேக் இன் இந்தியா என பாஜக அரசின் ஒவ்வொரு திட்டம் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இந்நிலையில் இது இன்று தமிழக சட்டசபையில் எதிரொலித்தது.

பொதுவாக தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக பேசும்போது எல்லாம் அது அதிமுகவின் கருத்து அல்ல, தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து என அதிமுக அமைச்சர்கள் கருத்து கூறுவர். இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் கேள்வொ நேரத்தின்போது திமுக உறுப்பினர் பொன்முடி, அதிமுகவின் தம்பிதுரை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அரசு மீது பல்வேறு புகார்களைச் சொல்லியிருக்கிறார். இது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்தா? அல்லது அரசின் கருத்தா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒரு திட்டத்தால் மாநிலங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநிலங்களின் கடமையாகிறது. அந்த வகையில் தம்பிதுரையின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை என தம்பிதுரைக்கு ஆதரவாக பேசினார். அதிமுக-பாஜக இடையே கூட்டணி அமைய உள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் பாஜக தோல்வியடைந்து விட்டதாக தம்பிதுரை கூறியதில் தவறு இல்லை என தமிழக சட்டசபையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிவுசெய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணி சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version