தமிழ்நாடு

சில்லரை போட்டவுடன் கலகலவென ஆடும் ஆடிட்டர்: குருமூர்த்தியை விளாசிய அமைச்சர் ஜெயக்குமார்!

Published

on

கேலிச்சித்திரம் மூலம் அதிமுகவை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரிக்கையை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின் அமைச்சரவையில் சேர்வதற்கு அதிமுக பிச்சை எடுப்பது போல கேலிச்சித்திரம் ஒன்றை துக்ளக் பத்திரிக்கை கடந்த 5-ஆம் தேதி வெளியிட்டது. இது சமூக ஊடகங்களில் அதிக கவனம் பெற்றது. இந்நிலையில் இதற்கு அதிமுக கடுமையான பதிலடிகளை கொடுத்து வருகிறது.

கடந்த 5-ஆம் தேதி வெளிவந்த துக்ளக் இதழின் 9-ம் பக்கத்தில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற செய்துவரும் முயற்சிகளை கேலி செய்யும் விதமாக கேலிச்சித்திரம் ஒன்று வெளியானது. அதில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு உள்ளது. மேலும் அதில், உஸ்ஸ்… யாரும் அழப்படாது. நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம் என எழுதப்பட்டுள்ளது.

இது மத்திய அமைச்சர் பதவிக்கு பாஜகவிடம் அதிமுக பிச்சை எடுப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுகவை இவ்வாறு கடுமையாக விமர்சிப்பது முதல்முறையல்ல, இதற்கு முன்னர் அதிமுக தலைவர்களை ஆண்மையற்றவர்கள் என குறிக்கும் ஆங்கில வார்த்தையால் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இவை இரண்டிற்கும் சேர்த்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா தரங்கெட்ட பத்திரிகையும் தரம்தாழ்ந்த விமர்சனமும் என்ற தலைப்பில் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளது.

அதில், பாஜக அமைச்சர்கள் உள்ளே அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், கழகம் வெளியே நின்று சாப்பிட ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது துக்ளக். பொதுவாழ்க்கை என்பது சேவையற்றது. ஆனால் இதற்கு பதிலாக சாப்பிடுவதே அரசியல் என்பதுபோல துக்ளக் வெளியிட்டிருக்கும் கார்ட்டூன் பாஜக அமைச்சர்களைத்தான் மலிவாகச் சித்தரித்து அவர்களின் நேர்மையை களங்கப்படுத்தி இருக்கிறது.

அதிகாரத்திற்கு ஏங்குவதாக அதிமுவை அப்பத்திரிகை விமர்சித்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகாலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் உள்ள கட்சி அதிமுக. மத்திய அரசின் அதிகாரங்களுக்கு அதிமுக ஒருபோதும் மல்லுக்கு நின்றதில்லை, மண்டியிட்டும் கிடந்ததில்லை என்பதே வரலாறு. ஆனால் இதையெல்லாம் அறியாதவர்கள் போல கழகத்தின் அமைச்சர்களை இம்போடேட் என்றும் பந்திக்காக அலைபவர்கள் என்றும் ஒரு குரூரத்தோடு ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் துக்ளக் பத்திரிகை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை தரம்தாழ்ந்து விமர்சித்துவருகிறது.

சோ நடத்திய பாரம்பரிய பத்திரிகை இப்போது நாளேல்லாம் பெட்டிகடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்றப் பத்திரிகையாக மாறிவிட்டது. அதனால் இதுபோன்ற நாலாந்தர விமர்சனங்களுக்கு செவிமடுக்காமல் கடந்து போவதே அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும் என மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளது அதிமுக தரப்பு.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தி ஒரு பத்திரிகை ஆசிரியர். துக்ளக் ஆசிரியராக சோ இருந்தபோது இதுபோன்ற விமர்சனங்கள் வந்ததில்லை. அவர் ஏன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. முன்பு அதிமுகவை திட்டி எப்படி வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பது உங்களுக்குத் தெரியும். அதுபோன்று திரும்பவும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம்.

கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல்லெறிவதை அவர் நிறுத்த வேண்டும். பத்திரிகை ஆசியர்களுக்கென்று ஒரு வரையறை இருக்கிறது. அதற்காக எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாமா? நாங்கள் விமர்சனம் செய்தால் குருமூர்த்தி தாங்கமாட்டார். இத்தோடு அடக்கி வாசிப்பது நல்லது என்பதை குருமூர்த்திக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். புடவையும் பட்டாடையும் பெட்டிக்குள் இருக்கும். ஆனால் கந்தல்தான் சில்லரை போட்டவுடன் கலகலவென ஆடும். அப்படிப்பட்டவர்தான் ஆடிட்டர் என விளாசினார்.

seithichurul

Trending

Exit mobile version