தமிழ்நாடு

5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமாரின் புகாரால் ஷாக் ஆன தேர்தல் ஆணையம்!!!

Published

on

தமிழகத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையத்திடம் பரபரப்புப் புகாரை அளித்துள்ளார். இந்த ஐந்து தொகுதிகளிலும் திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து அவர் புகார் அளித்தப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது:-

கொளத்தூர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, திருச்சி மேற்கு, காட்பாடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளோம். இந்த தொகுதிகளில் இருக்கும் வாக்காளர்களுக்கு கூகுள் பே போன்ற ஆன்லைன் பணப் பரிமாற்ற செயலிகள் மூலம் பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. 

குறிப்பாக கொளத்தூர் தொகுதியைப் பொறுத்தவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அங்கிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை அழைத்து, ஒரு குழவுக்கு பத்து ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்து வருகிறார். இப்படி விஞ்ஞானப் பூர்வமாக திமுக மக்களுக்குப் பணம் கொடுத்து வருகிறது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என்று அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். 

தமிழகம் முழுவதும் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயலில் திமுக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்த ஐந்து தொகுதிகளில் அவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எனவே தான் தேர்தல் ஆணையத்தை சந்தித்து முறையிட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.  

Trending

Exit mobile version