தமிழ்நாடு

கொளத்தூரில் எத்தனை மனுக்களுக்கு ஸ்டாலின் தீர்வு கண்டுள்ளார்: ஸ்டாலினை சீண்டிய ஜெயக்குமார்

Published

on

தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் இந்த அறிவிப்பை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடி விமர்சனம் செய்துள்ளார்.

முன்னதாக ஸ்டாலின், கோபாலபுரத்திற்கு வந்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அதன்படி, திமுக ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் பொது மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், http://stalinani.com என்ற இணையதளம் அல்லது 91710 91710 என்ற எண்ணில் தொடர்புகொண்டு கோரிக்கைகளை பதிவிட்டால், ஆட்சிக்கு வந்தவுடன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

இது பற்றி பேசியுள்ள ஜெயக்குமார், ‘திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரின் தொகுதி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கிறேன் என்று கூறி முன்பு ஒரு முறை மனுக்களைப் பெற்றார். அப்படி பெற்ற மனுக்களில் எத்தனைக்கு ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் தீர்வு கண்டுள்ளார். அப்படிப்பட்டவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் பிரச்சனைக்கும் தீர்வு காணப் போவதாக அறிவித்து வருகிறார்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள், வானம் ஏறி வைகுண்டம் பார்த்த கதைதான் ஸ்டாலின் சொல்வதெல்லாம்’ என்று கேலி செய்யும் தொனியில் விமர்சித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version