தமிழ்நாடு

“நேருக்கு நேர் வா பாக்கலாம்..!”- துரைமுருகனுக்கு ஜெயக்குமார் சவால்

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீதான இரண்டாம் கட்ட ஊழல் புகார்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இன்று சமர்பிக்கிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுகவையும், துரைமுருகனையும் விமர்சித்துப் பேசியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகைக்குப் படை எடுத்தது திமுக தரப்பு. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை விசாரிக்கச் சொல்லி உத்தரவிடுமாறு ஆளுநரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம் என்று ஆளுநரின் சந்திப்புக்குப் பின்னர் கூறினார் ஸ்டாலின்.

அப்போது ஊழல் புகார்கள் குறித்தப் பட்டியல் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரண்டாக் கட்ட ஊழல் புகார் விவகாரமும் அதிமுகவிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ‘எங்கள் மடியில் கனமில்லை அதனால் எது குறித்தும் பயமில்லை. ஆகவே தான் நாங்கள் மக்களைத் தொடர்ந்து எந்த வித தயக்கங்களும் இன்றி சந்தித்து வருகிறோம். துரைமுருகன் இப்படியெல்லாம் மறைமுகமாக எங்கள் மீது குற்றம் சாட்டக் கூடாது.

நேருக்கு நேர் விவாதம் செய்ய அவர் முன் வர வேண்டும். நாங்கள் தொடர்ச்சியாக விவாதத்திற்குத் திமுகவினரை அழைத்துக் கொண்டு தான் இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version