சினிமா

ஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ என்பதைச் சொல்ல ஒரு படம்…

Published

on

கறிக்காக கொண்டுவரும் ஒரு எருமை வெட்டுவதற்குமுன் தப்பித்து ஓடுகிறது. தப்பித்து ஓடிய அந்த எருமையைப் பிடிக்க ஒரு கிராமமே கிளம்புகிறது. அந்த எருமையைப் பிடித்தார்களா? கறி ஆக்கினார்களா என்பது தான் இந்த ஜல்லிக்கட்டு.

கேட்கவும் பார்க்கவும் சின்ன கதையாக இருக்கிறது. ஆனால், ஒரு சின்ன கதையை அதன் வாழ்வியலோடு அழகாக சொல்வதுதான் லிஜோ ஜோசின் படமாக்கும் முறை. அப்படித்தான் இந்த ஜல்லிக்கட்டையும் படமாக்கியிருக்கிறார் லிஜோ. படத்தின் ஆரம்பம் முதல் பத்து நிமிடங்கள் வெறும் சத்தங்கள் மூலமே நகர்த்துகிறார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வயதானவரின் மூச்சு விடும் சத்தம். இரவில் கேட்டும் வாட்ச் சத்தம், பறவைகள், விலங்குகளின் சத்தம், காலையில் மாட்டுக்கறி வெட்டும் சத்தம் என முழுவதும் சத்தம் அதன் காட்சிகளாகவே நகர்த்துகிறார்.

அங்கமாலி டைரி, இ ம யூ படங்களில் நடித்த ஆண்டனி வர்க்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் இதிலும் நடித்துள்ளார்கள். அதே எதார்த்தமான நடிப்புடன்.

இவ்வளவு தான் கதை என்று தெரிந்தபின் அதை எவ்வளவு சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறோம் என்பதில்தான் மிகப்பெரிய சவாலே இருக்கிறது. அந்த சவாலில் லிஜோ இந்தப் படத்தில் கொஞ்சம் சருக்கியிருக்கிறார். ஒரு கதை அதன் களம் இவற்றை அழகாக காட்டும் லிஜோ அந்தக் கதை இயக்கப்பட்டது தெரியாமலே ரம்மியமாக காட்சி அமைப்புகளின் மூலம் சொல்லி செல்வார். ஆனால், இந்தப் படம் முழுவதும் எருமையை துறத்திக்கொண்டே இருக்க வைத்திருக்கிறார். அது கொஞ்சம் இழுவையாக இருக்கிறது. ஒரு திருப்பமோ, ரசிகனை அடடா என ஆச்சர்யப்படுத்தும் விசயமோ இல்லை. சில நேரங்களில் எப்படா முடியும் என்று ஆகிவிடுகிறது. இத்தனைக்கும் படம் 1.30மணி நேரம் தான்.

இந்தச் சின்னக் கதைகள் மனிதனின் வக்கிரத்தை சொல்லியிருக்கிறார். உண்மையில் மிருகமாக யார் இருக்கிறார்கள். நாகரிகம் அடைந்துவிட்டோம் என்று சொன்னாலும் இன்னும் எவ்வளவு கொடூரங்களை தன் மனத்தில் மனிதன் அதுவும் ஆண் தூக்கிச் சுமக்கின்றான் என்பதையே இந்தப் படம் சொல்ல வருகிறது. அதற்கு எருமை சுற்றுவட்டார கிராம ஆண்களின் ஆண்மையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது அந்த ஒற்றை மிருகம். இதையெல்லாம் சொல்வதற்குள் இந்தப் படம் கொஞ்சம் நம்மை சோதித்து விடுகிறது.

மற்றபடி மலையாள படத்தில் இருக்கும் ஊர் அழகு, மாட்டுக்கறி வாசம், சின்னதாக ஒரு காதல், கொண்டாட்டம் என அத்தனையும் இருக்கிறது. ஒரு கருத்து சொல்லும் படத்தை கொஞ்சம் சத்தத்தை பொறுத்துக்கொண்டு பார்க்கமுடியும் என்றால் இந்தப் படம் உங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். மொத்தமாக இல்லை என்றாலும் கொஞ்சமாக ரசிக்க வைக்கிறது இந்த ஜல்லிக்கட்டு… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ என்ற ஜி.நாகராஜனின் ஒற்றை வரிக்கான படமாகவும் உள்ளது இது…

seithichurul

Trending

Exit mobile version