இந்தியா

ஜெய் ஸ்ரீராம் கோஷம் பிடிக்காதவர்கள் வேறு கிரகத்திற்கு செல்லுங்கள்: பாஜக சர்ச்சை கருத்து!

Published

on

ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் கேரள பாஜக மூத்த தலைவர் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர், இதர சிறுபான்மையினர் மீது கும்பல் தாக்குதல் நடத்தி கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறையை தூண்டும் கோஷமாக மாறிவருவதையும் தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தி திரைத்துறையினர் மற்றும் அறிவார்ந்த பிரபலங்கள் கடிதம் எழுதினர்.

அந்த கடிதத்தில் இயக்குநர் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் அபர்ணா சென், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா, மேற்கு வங்க நடிகர் கவுசிக் சென் உள்ளிட்ட 49 பேர் கையெழுத்திட்டிருந்தனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகர் கவுசிக் சென்னுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேரளா பாஜக மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான கோபாலகிருஷ்ணன் கூறியுள்ள கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஜெய் ஸ்ரீராம் முழக்கம் இந்தியா மட்டுமல்ல அண்டை நாடுகளிலும் ஒலிக்கும். அதனை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் தங்களது பெயரை ஸ்ரீஹரிகோட்டாவில் பதிவு செய்து நிலவு அல்லது வேறு எதாவது கிரகத்திற்கு சென்றுவிடுங்கள். இந்திய மக்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடவே வாக்களித்துள்ளனர். அவர்களின் இந்த முழக்கம் எப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

தேவைப்பட்டால் அடூர் கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பும் இந்த கோஷம் ஒலிக்கும். இது ஜனநாயக உரிமை என்றார். இந்நிலையில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் பிடிக்காதவர்கள் வேறு கிரகத்திற்கு செல்லுங்கள் என பாஜக மூத்த தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version