தமிழ்நாடு

என்ன ஆனாரோ தெரியவில்லையே.. 6 நாட்கள் ஆகிவிட்டது.. எங்கே சென்றார் முகிலன்?

Published

on

சென்னை: முகிலன் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது, உயிரோடு இருக்கிறாரா? இதுதான் தற்போது தமிழகத்தில் தற்போது மிக முக்கிய கேள்வியாக மாறி இருக்கிறது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன் காணாமல் போய் இன்றுடன் 6 நாட்கள் ஆகிவிட்டது. சென்னையில் ”பிரஸ் மீட்டில்” கலந்து கொள்வதற்காக வந்தவர் எங்கே போனார் என்று தெரியவில்லை.

போலீஸ் கைது செய்து சென்றதா, எதிரிகள் கடத்தி சென்றார்களா, காணாமல் போனாரா, கொல்லப்பட்டாரா என்று எந்த தகவலும் தெரியாமல் அவருக்கு நெருக்கமானவர்கள் கடும் சோகத்தில் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன் பல அடையாளங்களை கொண்டவர். சிறு வயதில் இருந்தே மக்களுக்காக போராடியவர், ஸ்டெர்லைட், சேலம் 8 வழி சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், தாது மணல் கொள்ளை, மணல் கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று மக்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைக்கும் எதிராக குரல் கொடுத்து போராடி இருக்கிறார்.

முக்கியமாக ஸ்டெர்லைட்டிற்கு எதிராக இவர் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தார். கட்டுரைகள் மூலம், ஆவணங்கள் மூலம் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் நடந்த கலவரங்களையும், அதன் உண்மை பின்னணியையும் தொடர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டே இருந்தார். இதனால் பல முறை முகிலன் தமிழக போலீசால் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் கடந்த 15ம் தேதி சென்னையில் முக்கியமான பிரஸ் மீட் ஒன்றை அவர் நடத்தினார். ‘கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற பெயரில் அவர் முக்கிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இதில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் நடந்தது என்ன, யார் கலவரத்தை உருவாக்கியது, மக்களா, அடியாட்களா என்று உண்மைகளை தெரியப்படுத்தி இருந்தார். அதோடு தென் மண்டல காவல்துறை ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

Trending

Exit mobile version