தமிழ்நாடு

பயப்படமாட்டோம், அஞ்சமாட்டோம், கவலைப்படமாட்டோம் – ஐடி ரெய்டுக்கு மு.க.ஸ்டாலினின் பதிலடி

Published

on

இன்று காலையிலிருந்து திமுக தரப்பைச் சேர்ந்த பலரது வீடுகளுக்கு வருமான வரித் துறை ரெய்டு நடந்து வருகிறது. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகளும், உதயநிதி ஸ்டாலினின் தங்கையுமான செந்தாமரையின் சென்னை வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. அதேபோல கரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்வினையாற்றி உள்ளார்.

‘என்னுடைய மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் உள்ளே புகுந்து, காவல்துறை அதிகாரிகள் 100 பேர் பாதுகாப்போடு சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது அ.தி.மு.க. அரசை இன்றைக்குக் காப்பாற்றிக் கொண்டு இருப்பது பா.ஜ.க. அரசு – மோடி அரசு. ஏற்கனவே சோதனைகள் பல நடத்தி அந்தக் கட்சியை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள். அதன் மூலமாகத் தமிழ்நாட்டில் உரிமைகள் எல்லாம் பறித்திருக்கிறார்கள். ஐ.டி., சி.பி.ஐ வைத்து எல்லாரையும் மிரட்டுகிறார்கள்.

நாம் ஒன்றை மட்டும் மோடி அவர்களுக்கு சொல்கிறேன். இது தி.மு.க. மறந்து விடாதீர்கள். நான் கலைஞருடைய மகன். இந்த சலசலப்புக்கு எல்லாம் நான் அஞ்சி ஒடுங்கிவிட மாட்டேன். மிசாவையே பார்த்தவன்தான், எமர்ஜென்சி காலத்தையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை சோதனை நடத்தினாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம். அதாவது தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. எனவே இவர்களை எப்படியாவது மிரட்டி அச்சுறுத்தி அவர்களை வீட்டில் படுக்க வைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது தி.மு.க.காரனிடம் நடக்காது. அது அ.தி.மு.க.வினரிடம்தான் நடக்கும். அவர்கள் மாநில உரிமைகளை இன்றைக்கு விட்டுவிட்டு உங்கள் காலில் விழுந்து இருக்கலாம். ஆனால் நாங்கள் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு அஞ்சிட மாட்டோம். எந்த சலசலப்பிற்கும் அஞ்சிட மாட்டோம். இதற்கெல்லாம் மக்கள் பதில் தரும் நாள் தான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என்பதை மறந்து விடக்கூடாது.

MK Stalin - edappadi palanisamy

தி.மு.க.வை மிரட்ட வேண்டும். தி.மு.க.வை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக நேற்றிரவு மோடி தலைமையில் அதிகாரிகள் எல்லாம் வைத்து கூட்டம் போட்டு, குழுவை கூட்டி, கலந்து ஆலோசித்து இன்றைக்கு நம்முடைய வீடுகளில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். இந்த சோதனைகளைப் பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம், அஞ்சமாட்டோம், அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம். இன்னும் சோதனை செய்யுங்கள். அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். நீங்கள் சோதனை செய்ய, சோதனை செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் கிளர்ந்து எழும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே நம்முடைய உரிமைகளைக் காப்பாற்றும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமையப்போகிறது. அதை மட்டும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’ என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

 

Trending

Exit mobile version