சினிமா

சூர்யாவின் கீழடி விசிட் சர்ச்சையாகி உள்ளதா?

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா, ஜோதிகா தன் குடும்பத்துடன் கீழடிக்கு சென்றிருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இதில் தற்போது சர்ச்சையான விஷயமும் கிளம்பியுள்ளது.

கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இங்கிருந்து சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்றும் அங்கு உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதியான முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, ஜோதிகா, தேவ் மற்றும் தியா ஆகியோர் குடும்பத்துடன் பார்வையிட்டனர். இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசனும் உடனிருந்தார். அங்கு சென்று பார்வையிட்டது குறித்து, நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி தமிழரின் தாய்மடி என உணர்த்திய தமிழ்நாடு அரசுக்கு நன்றி’ எனவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா.

இந்த நிலையில், சூர்யா தனது குடும்பத்துடன் வந்திருந்தபோது, இவர்களது வருகைக்காக அன்று அருங்காட்சியகத்தைப் பார்வையிட வந்திருந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட நேரம் அனுமதிக்காமல் வெளியே காத்திருக்க வைத்ததாக பேச்சு எழுந்து சர்ச்சையாகி இருக்கிறது. ஆனால், இதுகுறித்து அருங்காட்சியத்தின் தரப்பில் இருந்தோ, சூர்யா தரப்பில் இருந்தோ எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version