இந்தியா

ஓய்வு பெற போகிறாரா முகேஷ் அம்பானி: ரிலையன்ஸ் அடுத்த தலைவர் யார்?

Published

on

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி விரைவில் ஓய்வு பெறப் போவதாகவும் இதனை அடுத்து அவரது வாரிசுகள் தலைமை பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் பிறந்தநாள் நேற்று முன்தினம் மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டதை அடுத்து இந்த விழாவில் அவர் பேசியபோது, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வரும் ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறும் என்றும் இந்த நிறுவனத்தை இன்னும் அதிக வளர்ச்சியுடன் தனது வாரிசுகள் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சிலிருந்து விரைவில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி ஓய்வு பெறுவார் என்றும் அவரது வாரிசுகள் தலைமை பொறுப்பை ஏற்று நடத்துவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய 2 மகன்களும் இஷா அம்பானி என்ற ஒரு மகளும் உள்ளனர். இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் உள்ளார். அதேபோல் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குநராகவும், ஆனந்த் அம்பானி ஜியோ பிளாட்ஃபார்ம்ஸில் கூடுதல் இயக்குநராகவும் உள்ளனர்.

இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றால் அவரது வாரிசுகள் மூவரும் இணைந்து தலைமைப் பொறுப்பை கவனிப்பார்களா? அல்லது இஷா அம்பானி தனியாக கவனிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி முகேஷ் அம்பானி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்த உறுதியான தகவலும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version