தொழில்நுட்பம்

ட்விட்டருக்கு மாற்றாக வந்துள்ள ‘Koo App’ல் தகவல் கசிவா..?- ஆதாரத்துடன் விளக்கம்

Published

on

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக வந்துள்ள இன்னொரு தளம் தான் ‘கூ’ செயலி. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்கு மத்திய அரசு மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த செயலி ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்னும் பிரதமர் மோடி வலியுறுத்தும் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்திற்கு வலு சேர்ப்பதாக வலதுசாரிகள் கூறி வருகின்றனர். ‘ஆத்மநிர்பார் பாரத் செயலி போட்டியிலும்’ இந்த செயலி முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் போன்களில் இந்த செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதற்கென்று தனியாக ஒரு இணையதள பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே ட்விட்டருக்கு அனைத்து வகைகளிலும் இந்த செயலி மாற்றாக இருக்கும் எனப்படுகிறது. சமீக காலமாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் உரசல் போக்கு நிலவி வருகிறது.

மத்திய அரசுத் தரப்பு, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துக் கூறி வருபவர்களை அதன் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தி வருகிறது. அதற்கு இதுவரை அடிபணியாமல் இருந்து வருகிறது ட்விட்டர். இதையொட்டித் தான் வலதுசாரிகள், கூ செயலியைப் பயன்படுத்தப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்படி கூ செயலிக்கு ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வந்தாலும் அதில் தகவல் கசிவு இருப்பதாகவும், பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.

பிரபல ஹேக்கர் எலியட் ஆல்டர்சன் இது குறித்துக் கூறுகையில், ‘இந்த புதிய கூ செயலியில் நான் 30 நிமிடங்கள் மட்டுமே செலவு செய்தேன். இந்த செயலி, அதில் இருக்கும் பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை லீக் செய்து வருகிறது என்பதை கண்டறிந்துள்ளேன். பயனர்களின் இ-மெயில், பிறந்த தேதி, திருமணமானவரா என்கிற தகவல், அவரின் பாலினம் என சொல்லிக் கொண்டே போகலாம்’ என்று கூறி, தன் கருத்துக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் தகவல்கள் அடங்கிய ஸ்கிரீன் ஷாட்களையும் வெளியிட்டுள்ளார்.

இதனால் கூ செயலியைப் பயன்படுத்துவோர் மற்றும் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூ செயலி பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து ‘ட்விட்டர் தளத்தை தடை செய்ய வேண்டும்’ என்கிற கோஷம் ஓங்கி ஒலித்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 

Trending

Exit mobile version