இந்தியா

டெல்லி எல்லையில் குறையும் நபர்கள்; முடிவுக்கு வருகிறதா விவசாயிகள் போராட்டம்?- அடுத்த பிளான் இதுதானாம்

Published

on

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதற்கு எதிராக கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு மேலாக, டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் பெருந்திரளான விவசாயிகள். கடுங்குளிரையும் பொருட் படுத்தாமல், ‘அனைத்து வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்கிற ஒற்றைக் கோரிக்கையை முன் வைத்துப் போராடி வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் எண்ணிக்கைப் படிப் படியாக குறைந்து வருகிறது. இதனால் இந்தப் அறவழிப் போராட்டம் முடிவுக்கு வருமா என்கிற எண்ணம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில், ‘எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் முடிய வாய்ப்பே இல்லை’ என்று உறுதியாக சொல்கிறது விவசாயிகள் தரப்பு. குறைந்து வரும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கையைப் பற்றி விவசாயிகளிடம் கேட்ட போது, ‘இந்தப் போராட்டம் என்பது மிக நீண்ட காலம் தொடரும் எனத் தெரிகிறது. எனவே டெல்லி எல்லைகளில் குறைந்த ஆட்களை இருக்கச் செய்வது எங்களின் திட்டத்தின் ஒரு பகுதி தான்.

இனி வரும் நாட்களில் பல மாநிலங்களில் பெரும் போராட்டங்களை ஒருங்கிணைப்போம். அதன் மூலம் அரசு மற்றும் மக்களின் கவனத்தை ஈர்ப்போம்’ என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் தான் இந்தப் போராட்டம் மையம் கொண்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த சில வாரங்களாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தும் பெருந்திரளான விவசாயிகள் போராட விதிக்கு வந்துள்ளனர். அதைத் தவிர்த்து உத்தரகாண்ட், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் அவ்வப்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் திரண்டு போராடி வருகிறார்கள். இப்படி மற்ற மாநிலங்களுக்குப் போராட்டத்தை எடுத்துச் செல்லவும், மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டவும் விவசாய சங்கங்கள் முடிவெடுத்து உள்ளன. இதன்படி வரும் நாட்களில் விவசாய சங்கப் பிரதிநிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுவரை மத்திய அரசுத் தரப்புக்கும், விவசாய சங்கப் பிரதிநிகளுக்கும் இடையில் நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வில் தான் முடிந்துள்ளன. தற்போதைக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை அமல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பது தெரிகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version