செய்திகள்

முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ‘கொரோனா விதிமீறலா..?’- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

அதிமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி விதிமீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் சில மாதங்களுக்கு முன்னர் ஓர் குழப்பம் எழுந்தது. ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ என்பதுதான் அந்தக் குழப்பம். ஒரு பக்கம் 3 முறை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வமே, மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சியின் ஒரு பிரிவினர் குரல் எழுப்பினர். இன்னொரு பக்கம், ‘கட்சியின் முகமாக இருப்பது எடப்பாடி பழனிசாமிதான். எனவே அவரை முன்னிறுத்தித்தான் தேர்தலைச் சந்திக்க வேண்டும்’ என்று சில அமைச்சர்கள் வெளிப்படையாக பேசினார்கள்.

இந்தக் குழப்பத்திற்குத் தீர்வு காண கடந்த செப்டம் 28 ஆம் தேதி, அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது, ‘அக்டோபர் 7 ஆம் தேதி யார் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்படும்’ என்று சொல்லப்பட்டது. அதன்படியே அக்டோபர் 7 அன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‘எதிர்வரும் தேர்தலில் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையொட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில், ‘கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட பின்னர், முகக்கவசம் அணிதல், தனிமனித விலகலை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அறிவித்த நிகழ்ச்சி தமிழக ஆளுங்கட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளின் போது அதிமுகவினர், கொரோனா விதிகளை பின்பற்றவில்லை. அரசை நிர்வகித்து வரும் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், கொரோனா விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவதை அனுமதித்துள்ளனர். எனவே மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய இரண்டு பேர் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘மனுதாரர் குறிப்பிட்டுள்ள நாளில் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களில் இருந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், தனி மனித இடைவெளி பின்பற்றப்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், மனு தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வரும் ஜனவரி 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

seithichurul

Trending

Exit mobile version