தமிழ்நாடு

முதல்வராக 7 ஆம் தேதி பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்; அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் வெளியானது!

Published

on

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ஆளுங்கட்சியான அதிமுக, 66 இடங்களில் வெற்றியடைந்துள்ளது.

இதையொட்டி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைய உள்ளது. திமுக தலைவர், தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்க உள்ளார். வரும் 7 ஆம் தேதி அவரது பதவியேற்பு விழா, மிக எளிமையாக நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், ராஜீவ் ரஞ்சன் அதிகாரப்பூர்வ அழைப்பிதழை வெளியிட்டு உள்ளார்.

அதில், ‘2021 ஆம் ஆண்டு மே திங்கள் 7 ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும். தங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Trending

Exit mobile version