கிரிக்கெட்

INDvENG – “ரஹானே – கோலி இடையில…”- டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே பற்றவைக்கும் பீட்டர்சன்

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்குள்ளாகவே சில பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன்.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 5 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு நாட்டு வீரர்களும் சென்னையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர். நேற்று முன் தினம் முதல் இந்திய வீரர்கள், தங்களது வலைப் பயிற்சியை ஆரம்பித்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா, 2 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. அதைத் தொடர்ந்து பெரும் உத்வேகத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக களம் காண உள்ளது இந்திய அணி.

இந்நிலையில் பீட்டர்சன், ‘இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிறைய விஷயங்களை எதிர்பார்க்கப்பட்டாலும், எனக்குத் தெரிந்து ஒரு விஷயம குறித்து தான் அதிகம் விவாதிக்கப்படும். அது தான் விராட் கோலி – அஜிங்கியா ரஹானே காம்போ.

ரஹானே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒரு கேப்டனாக மிகச் சிறப்பாக செயல் பட்டார். அவர் தற்போது இந்தியாவுக்குத் திரும்பி, துணை கேப்டனாக இருப்பார். தற்போது கோலி, அணியின் கேப்டனாக மீண்டும் செயல்பட்டு வழி நடத்துவார். இந்த காம்போ, களத்தில் எப்படி செயல்படும் என்பதைப் பார்க்க மிக ஆர்வமாக இருக்கிறேன். இந்த தொடர் முழுவதும் அவர்கள் இருவருக்கு இடையிலான ஒப்பீடுகள் வந்து கொண்டே இருக்கும் என நினைக்கிறேன்’ என்றார்.

மேலும் அவர், ‘இந்த டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரை இந்தியா தான், வெற்றி பெறும் என்று 100 சதவீதம் நம்புகிறேன். உள்ளூர் சூழலில் இந்ததியாவுக்கு அதிக அனுபவம் உள்ளது. தற்போது கோலியும் அணிக்குத் திரும்பியுள்ளார். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களின் சிறந்த அணியை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வு செய்யவில்லை. அது மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் மற்றும் பர்ன்ஸ் வந்திருந்தது பலம் சேர்த்தாலும், இந்தியா, தொடரை வெல்வது உறுதி’ என்று திட்ட வட்டமாக கூறியுள்ளார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version