கிரிக்கெட்

INDvENG – “அவங்க நம்மள பற்றி நினைக்கிறாங்களா?”- 3வது டெஸ்டுக்கு முன்னர் சீறிய ரோகித்; என்ன காரணம்??

Published

on

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. அடுத்து வரும் இரு போட்டிகளும் குஜராத் மாநில அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. 3வது போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில் அங்குள்ள மைதானம் இந்திய அணிக்குச் சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடரில் வெல்வதற்காகவே இந்திய அணிக்குச் சாதகமாக பிட்ச் தயார் செய்யப்பட்டிருக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தக் கருத்தைச் சாடி பேசியுள்ளார் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா.

அவர் கூறுகையில், ‘ஒரு ஆட்டத்தில் பிட்ச் என்பது இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கப் போகிறது. அப்படி இருக்கும் போது, பிட்ச் குறித்தான விவாதம் எழுப்பப்படுவதற்கான அவசியம் என்னவென்பது குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாக இந்தியாவில் ஒரே மாதிரியாகத் தான் பிட்சுகள் தயார் செய்யப்படுகின்றன. அதில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. இருக்கவும் கூடாது என்று தான் நினைக்கிறேன்.

ஒரு அணி, தங்கள் தாய் மண்ணில் விளையாடும் போது, அதற்கு உண்டான சாதகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறேன். நாங்கள் வேறொரு நாட்டுக்குப் பயணம் சென்று விளையாடுகையில், அந்த நாட்டுக்குச் சாதகமாகத் தான் அந்த பிட்சுகள் இருக்கும். அப்போது அவர்கள் நாங்கள் வருகிறோம் என்று கணக்கில் கொண்டு பிட்சுகளை அமைக்கிறார்களா? அப்படி இருக்கையில் இந்தியாவில் மட்டும் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று பேசப்படுகிறது.

இது தான் சொந்த நாட்டில் விளையாடுவதற்கும், வெளிநாடுகளில் விளையாடுவதற்கும் உள்ள வேறுபாடு. அப்படி இருக்கக் கூடாது என்றால் ஐசிசி அமைப்பு, பிட்ச் உருவாக்குவதற்கு என்று சில சட்டத் திட்டங்களை வகுத்து எல்லோரையும் பின்பற்றச் செய்ய வேண்டும்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு வீரரின் திறன் குறித்து விவாதம் செய்வது மற்றும் பேசுவது சரியாக இருக்கும். பிட்ச் பற்றிப் பேசுவது என்பது சரியானதாக இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version