கிரிக்கெட்

INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியாவுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் சுவர் என்றழைக்கப்படும் செத்தேஷ்வர் புஜாரா, இங்கிலாந்தின் சுழற் பந்து வீச்சாளர் ஜாக் லீச் வீசிய பந்தில் 17 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார்.

அவரை அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பி அதிர்ச்சிக் கொடுத்தார். தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா மட்டும் தொடர்ந்து ஒரு முனையில் ரன்கள் குவித்து வந்தார். அவருடன் இந்திய துணை கேப்டன் அஜிங்கியே ரஹானே, பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினார். ஆனால் அவரும் 27 ரன்களில் வெளியேற இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. 143 பந்துகளில் 49 ரன்கள் மட்டும் அடித்து நிதான ஆட்டம் ஆடி வந்த ரோகித்தும் அவுட்டாக தற்போது இந்தியா இக்கட்டான சூழலில் இருக்கிறது.

தற்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பன்டும், ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வினும் விளையாடி வருகிறார்கள். இன்னும் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே பேட்டிங் செய்யக் கூடிய திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 100 ரன்களாவது அதிகம் எடுத்தால் தான் இந்தியாவால், வெற்றியை உறுதி செய்ய முடியும். இல்லையென்றால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளித்து வெற்றியை நிலைநாட்டுவது கடினமான காரியமாக மாறிவிடும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ மட்டும் தான் இந்திய அணியால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். ஆட்டம் போகிற போக்கை வைத்துப் பார்த்தால் எப்படியும் டிரா ஆக வாய்ப்பில்லை என்பது மட்டும் தெரிகிறது. இதனால் எந்த அணி வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Trending

Exit mobile version