கிரிக்கெட்

INDvAUS – அறிமுக போட்டியிலேயே ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர்!

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினார். வார்னர், 1 ரன்னில் சிராஜ் பந்தில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இன்னொரு ஓப்பனரான ஹாரிஸும், 5 ரன்களில் தாக்கூர் பவுலிங்கில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்னஸ் லாபுஷானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். இதனால் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 36 ரன் எடுத்து ஸ்மித், விளையாடிக் கொண்டிருந்த போது, வாஷிங்டன் சுந்தர் பந்து வீச வந்தார். இது அவருக்கு அறிமுகப் போட்டி என்பதால் முனைப்பாக பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது லெக் சைடில் நின்றிருந்த ரோகித் சர்மாவை நோக்கி ஸ்மித், ரன் எடுக்க அடிக்க, அது கேட்ச்சாக மாறியது. ரோகித் கேட்ச் பிடிக்க, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுந்தரின் முதல் விக்கெட்டாக அது அமைந்தது.

தற்போது ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் இரு அணிகளும் தங்களின் உச்சபட்ச திறமையை வெளிக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆடும் 11 பேரில் ‘யார்க்கர் கிங்’ நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது நடராஜனுக்கும் முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் இந்தப் போட்டியில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் நடராஜன், நன்றாக பந்து வீசி, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

 

Trending

Exit mobile version